இந்திய இரயில்வே இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 12.54 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 67,956 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது.
1853ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ரயில் நீராவியின் ஆற்றலைக் கொண்டு இயங்கியது. இன்று பெரும்பாலும் மின்சார ரயில்களே இங்கே இயங்குகின்றன. ரயிலில் பயணம் செய்தால் நம் மேலே கரி படிந்த காலம் போய் இப்பொழுது நாம் வந்தே பாரத் வரை வந்துவிட்டோம். நான் தகவல் நுட்ப நிபுணர் என்பதாலும், கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் செய்ய இந்திய ரயில்வேயை அதிகம் பயன்படுத்தியதாலும், தகவல் தொழில்நுட்ப ரீதியாக இந்திய இரயில்வே அடைந்துள்ள வளர்ச்சியை கண்டு பிரமித்துப்போகிறேன்.
இது வரை அடைந்த வளர்ச்சியெல்லாம் மிஞ்சும் விதமாக சமீபத்தில் பல முன்னெடுப்புகளை நாம் காணமுடிகின்றது. அதில் ஒன்று தான் “ஸ்வரயில்” செயலி. இதில் முக்கிய பங்குவகிப்பவர் திரு. அஸ்வினி வைஷ்னவ். இவர் இந்திய ரயில்வே துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் மத்திய அமைச்சராக மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார். IIT கான்பூரில் முதுகலைப்பட்டம், அமெரிக்காவின் பிரபல வார்ட்டன் மேலாண் பள்ளியில் வணிக நிர்வாகவியல் முதுகலைப்பட்டம், இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு(UPSC) அகில இந்திய தரவரிசையில் 27ஆம் இடம் பெற்று, நேர்மையான IAS அதிகாரியாக பணியாற்றி, இன்று மத்திய அமைச்சராக பணியாற்றுபவர். அவரின் சமீபத்திய பல சாதனைகளில் ஒன்று தான் இந்த “ஸ்வரயில்” செயலி.
சர்வரோக நிவாரணியைப் போல இந்த “ஸ்வரயில்” செயலி, இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு வழிவகை செய்யும். இந்திய ரயில்வே தகவல் தொழில்நுட்ப துறையில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். இந்த செயலி தற்பொழுது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வாடிக்கையாளர்களைக் கொண்டு பரிசோதனை செய்து வரப்படுகிறது. விரைவில் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பின்வரும் சேவைகள் இந்த செயலி வழங்கயிருக்கிறது.
- டிக்கெட் பதிவு(முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத ரயில்கள் இரண்டிற்கும்)
- டிக்கெட் ரத்து செய்திட, பணத்தை திரும்பப் பெற்றிட
- பதிவு செய்த டிக்கெட் விவரங்கள்
- சுய விவரங்கள்(பயோமெட்ரிக் மற்றும் பல விவரங்கள் உட்பட)
- முன்பணம் ஏற்றிக்கொள்ளும் வசதி(ஆர்-வாலட்/R-Wallet)
- நிகழ்நேர ரயில் வரும் இடம் அறிந்திட
- ரயில் வரும் நடைமேடை அறிய
- ரயில் பெட்டி வரும் இடம் அறிய
- உணவு ஆர்டர் செய்திட
- தமிழ் உட்பட பல இந்திய மொழிகளிலும் சேவைகள் பெற்றிட
- புகார் அளித்தல் மற்றும் தீர்வு காணுதல்
நடைமுறையில் இருக்கும் பல செயலிகளில் வழங்கப்படும் சேவைகளும் இங்கே ஒருங்கே கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.
உலகின் பல வளர்ந்த நாடுகளுக்கு இணையாகவும், அதற்கு ஒரு படி மேலாகவும் நமது இந்திய ரயில்வே சேவைகள் வழங்குவதைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. ஒரு உண்மையுள்ள இந்தியக் குடிமகனாக இந்த சேவைகளை முறையாக பயன்படுத்துவதே நம் கடமையாகும். ரயில்களையும், ரயில் நிலையங்களையும், ரயில் தண்டவாளங்களையும், ரயில்வே சொத்துக்களையும், சேதம் மற்றும் அசுத்தம் செய்யாமல் இருப்பதே நம் நாட்டிற்கு நாம் செய்யும் ஆகச் சிறந்த தொண்டாகும். வாழ்க நம் தாய்த்திருநாடு!