தமிழ், நாட்டுநடப்பு

ஜீவனாம்சம் கால்குலேட்டர்

சில நாட்களுக்கு முன்பு எனது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் ஒரு பெண், தான் ஒரு நிதி ஆலோசகர் என்று அறிமுகம் செய்துகொண்டார். எனக்கு அவரது சேவைகள் ஏதும் தேவையில்லை என்று சொல்வதற்குள், தயவு செய்து இரண்டு நிமிடங்கள் மட்டும் அவர் சொல்வதை கேட்குமாறு கேட்டுக்கொண்டார். சபை நாகரிகம் கருதி அவரை இடைமறிக்கவில்லை. அடுத்து அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

நிதி ஆலோசகர்கள் வழக்கமாக மருத்துவக்காப்பீடு, குழந்தைகளின் கல்வி, இது போன்ற காரணங்களைச் சொல்லி சேமிப்பு, காப்பீடு, முதலீடு, என்று தொடர்வதை வாடிக்கையாக பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இந்த நிதி ஆலோசகர் அவர் கேட்ட இரண்டு நிமிடங்களில் இப்படித் தான் துவங்கினார், “சார், இப்ப வந்து பாத்திங்கனா, டிவோர்ஸ் எல்லாம் ரொம்ப சாதாரணம் ஆகிடுச்சு, யாருக்கும் எப்ப வேணாலும் டிவோர்ஸ் ஆகலாம், உங்களுக்கும் எப்ப வேணாலும் ஆகலாம் சார், அப்படி டிவோர்ஸ் ஆகி நடுத்தெருவுக்கு வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க, சமீபத்துல ஒரு நடிகருக்கு கூட மாசத்துக்கு 40 லட்சம் அலிமனி கேட்டு டிவோர்ஸ் கேஸ் நடக்குது, எங்க கம்பெனில நாங்க உங்களுக்கு டிவோர்ஸ் ஆனாலும், அலிமனி குடுத்தாலும், உங்களுக்கு போதுமான பணம் இருக்கிற மாதிரி இன்வெஸ்ட்மென்ட் பிளான் பண்றோம் சார். உங்களுக்கு எதுவும் தேவைப்படுதா?”

சற்றும் எதிர்பாராத இந்த அழைப்பில் என் காதுகளில் நான் கேட்டவை என் மூளையை எட்ட எனக்கு ஒரு நிமிடம் தேவைப்பட்டது.

“உங்களுக்கு எதுவும் தேவைப்படுதா சார்?” “சார், லைன்ல இருக்கீங்களா?”

சபை நாகரீகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நான், என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே அழைப்பை துண்டித்துவிட்டேன். அதற்குப் பிறகு ஒரு முறை எனக்கு அந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தது, ஆனால் நான் எடுக்கவில்லை.

பொறுமையாக யோசித்துப் பார்த்த பிறகு தான் புரிகிறது, அந்த பெண் சொன்னதில் உள்ள நியாயம். எப்படி நாம் எதிர்பாராமல் வரும் நோய்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்கிறோமோ, எப்படி எதிர்காலத்தில் நம் குழந்தைகள் என்ன படிக்கப்போகிறார்கள், எங்கு படிக்கப்போகிறார்கள், எவ்வளவு செலவு ஆகும் என்று தெரியாமலே அதற்கு சேமிக்கிறோமோ, அதே போல் விவாகரத்தையும் நாம் அறியாத ஒரு காரணியாகக் கருதி, அதற்காக சேமித்து வைத்துக்கொள்வதும் ஒரு பாதுகாப்பே எனத் தோன்றியது.

நன்கு வசதியாக வாழும் ஒரு குடும்பத்தின் தலைவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிகிறது. அந்த குடும்பத்தின் சேமிப்பு, சொத்துக்கள் அனைத்தையும் இழந்து அவருக்கு மருத்துவம் பார்த்தும், இறுதியில் அவர் இறந்து விடுகிறார். ஒரு மருத்துவக்காப்பீடு இருந்திருந்தால், ஓரளவிற்கு அந்த குடும்பத்தின் நிதிநிலை பாதுகாக்கப்பட்டிருக்கும். ஒரு விவாகரத்தின் முடிவில் தனது அனைத்து உடைமைகளையும் இழந்த பல நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். காலத்திற்கேற்றாற்போல், நாமும் பல காரணிகளுக்காக சேமித்து வைத்துக்கொள்வது, காப்பீடு செய்துகொள்வது, முதலீடு செய்வது சரியென்றே தோன்றியது.

Googleயை திறந்து “alimony calculator” என்று டைப் செய்தேன். அதற்குப் பிறகு தான் தெரிந்தது நான் எவ்வளவு பின்தங்கியுள்ளேன் என்பது. பிரபல மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமான DSP, இதற்கென்றே ஒரு பிரத்யேகமான ஒரு பக்கத்தை அருமையாக வடிவமைத்திருந்தார்கள், அதன் இணைப்பு இங்கே. இன்னும் பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் இதே போன்ற சேவைகளை வழங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

தனிப்பட்ட முறையில் நான் திருமண பந்தத்தின் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவன். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது திருமண பந்தத்தில் மிக முக்கியமான அம்சம். அதே வேளையில், ஒரு தவறான நபரைத் திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் ஆயுள் முழுவதும் அந்த திருமண பந்தத்தில் இருப்பது சரியாக இருக்காது; அங்கு விவாகரத்தே சிறந்தது. ஆனால் விவாகரத்து, ஜீவனாம்சம் என்ற பெயரில் ஒரு ஆணோ/பெண்ணோ சுரண்டப்படுவதை ஒரு போதும் ஏற்க இயலாது. ஆனால் பெருகிவரும் இது போன்ற விவாகரத்துக்கள் தான் இப்படிப் பட்ட ஜீவனாம்ச கால்குலேட்டர்களுக்கு வழிவகை செய்கிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது மனைவிக்கு 2021ஆம் ஆண்டு 76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜீவனாம்சமாக வழங்கினார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது மனைவிக்கு 2019ஆம் ஆண்டு 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜீவனாம்சமாக வழங்கினார். நம் நாட்டில் பல லட்சம் ஆண்கள் ஆயிரங்களிலும், லட்சங்களிலும், கோடிகளிலும் ஜீவனாம்சம் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். சில பிரபலமான ஆண்கள் கொடுக்கும் பொழுது தான் இது செய்தியாகிறது. பல ஆண்கள் விவாகரத்தையோ, ஜீவனாம்சம் கொடுப்பதையோ வெளியில் யாருக்கும் தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்கின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றோ வரும், அல்லது வராமலே போகும் விவாகரத்துக்காக சேமித்து வைத்துக்கொள்வது சரியா? தவறா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *