‘Battle of the sexes’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்கூறு உள்ளது. ஆண் மற்றும் பெண் இடையே உள்ள முரண்பாடுகள் அதனால் ஏற்படும் மோதல் தான் இந்த பாலினப் போர். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று இந்த பாலினப் போர். உலகம் முழுவதும் பெரும்பாலான சமூகங்களில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
காடுகளில் வாழ்ந்த ஆதிமனிதன் உடல் வலிமை கொண்டதால் வேட்டையாடுவதும், உணவு சேகரிப்பதும், தன் குடும்பத்தை மற்றும் தன் கூட்டத்தை காப்பதும் அவன் கடமையாக இருந்தது. மனித மூளையில் கார்ட்டெக்ஸ்(Cortex) என்று ஒரு பகுதி உள்ளது. கடந்த பல லட்சம் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியை, அதன் தரவுகளையும் தன்மைகளையம் கொண்டது இப்பகுதி. ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 17வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாமல் உங்கள் அறையில் ஒரு நீளமான, தடிமனான கயிற்றை உங்கள் குடும்பத்தினர் யாரோ வைத்துவிடுகின்றனர். அன்று இரவு நீங்கள் உங்கள் அறைக்குள் செல்கிறீர்கள். விளக்கு அணைத்த வண்ணம் இருக்கிறது. திடீரென்று இருட்டில் கயிற்றை பார்க்கும் பொழுது அந்தக் கணம் அது பாம்பென்றே தோன்றும், ஒரு கணம் அது மரண பயத்தைக் காட்டிவிடும். இது தான் கார்ட்டெக்ஸின் பணி. நாமே அறியாமல் நம் ஆழ்மனதில் பல லட்சம் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியால் ப்ரோக்ராம்(Program) செய்யப்பட்ட விஷயங்கள் பல, அதில் ஒன்று தான் ஆணாதிக்கம். இது ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொருந்தும்.
சரி, இப்பொழுது இந்த பாலினப் போரைப் பார்ப்போம். இன்றல்ல, நேற்றல்ல, பல காலமாக இந்த ஆணாதிக்கத்தை எதிர்த்து அறை கூவல் விட்ட பெண்கள் வரலாற்றில் பல உண்டு. அப்படி சில பெண்களை ஆண்கள் பெரிதும் போற்றிய வரலாறும் உண்டு(தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு. ஜெயலலிதா இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம்). ஆனால் உளவியல் ரீதியாக, பெரும்பாலான ஆண்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள். பெரும்பாலான பெண்களும் ஆணின் ஆதிக்கத்தில் வாழ்வதையே விரும்பினார்கள்.
எனது தாத்தா ஒருவர் முன்பாக எங்கள் குடும்பத்தில் யாரும் உட்காரக் கூட மாட்டார்கள். அவர் ஒரு விஷயம் சொல்லும் முன்பே அதன் குறிப்பறிந்து அனைவரும் அதை விரைந்து செய்வர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு கொடுங்கோலராகவும், சர்வாதிகாரியாகவும் தோன்றலாம். ஆனால் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அவர் மீது ஒரு மரியாதை மற்றும் பாசம் கலந்த பயம் இருந்தது. அவர் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம், எங்கள் நம்பிக்கை எப்பொழுதும் வீண் போனதில்லை. காலம் செல்லச்செல்ல, இரண்டு மூன்று தலைமுறைகள் கடந்த பின்பு, அவரைப் பற்றி என் குழந்தைகளிடம் கதைகள் சொன்னால், இப்படியும் ஒருவர் இருந்திருக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஏனென்றால் அன்றைய ஆணாதிக்கம் இன்று நிச்சயமாக இல்லை, அது நீர்த்துக்கொண்டே செல்கிறது. நீர்த்துக்கொண்டு செல்கிறதே தவிர, அது இன்றும் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்று இங்கே ஏராளம். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சாதனைகள் புரிகின்றனர். இது மிகவும் வரவேற்பிற்குரியது. யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்(ஆ-நெய் பூ-நெய் உவமையும் தெரியும்). இது யானையின் காலமா, பூனையின் காலமா என்று தெரியவில்லை. ஆனால் பாலினப் போர் உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒரு புறம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மறுபுறம் ஆண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்.
ஒரு நாள் நான் சாலையில் சென்றுகொண்டிக்கும் பொழுது இரண்டு இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளானது. ஒரு வாகனத்தில் ஒரு ஆணும் மறு வாகனத்தில் ஒரு பெண்ணும் இருந்தனர். அந்தப் பெண் மீது தான் தவறு, அதனால் தான் விபத்து நடந்தது. ஆனால் அங்கே இருந்த மொத்தக் கூட்டமும் அந்த பெண்ணிற்கு ஆதரவாக நின்றது. இரு பாலர் படிக்கும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பெண்கள் செய்யக்கூடிய பல தவறுகள் பல நேரங்களில் அவர்கள் பெண்கள் என்பதற்காவே மன்னிக்கப்படுகிறது. ஆண்களோ செய்யாத தவறுகளுக்கும் தண்டிக்கப்படுகிறார்கள். பொது இடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் பல நேரங்களில் பெண்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்படி பல சலுகைகளை அனுபவிக்கும் பெண்கள் அது தங்கள் உரிமை என நம்பத் துவங்குகின்றனர். அனைத்து சட்டதிட்டங்களும் பெண்களுக்கே சாதகமாக இருக்கின்றன. இந்தச் சூழலை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, போலிப் பெண்ணியம் பேசி, வயிறு வளர்க்கிறது ஒரு கூட்டம். சினிமா மற்றும் ஊடகங்கள் தங்கள் லாபத்திற்காக எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றுகின்றன.
பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணங்களில் முன்பு ஆணின் குடும்பத்தினர் என்னென்ன அராஜகம் செய்தனரோ, இன்று அதை விட பல மடங்கு பெண்ணின் குடும்பத்தினர் செய்கின்றனர். மக்களின் மனநிலை பரவலாக மாறியிருக்கிறது, எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. பல விஷயங்களில் ஒரு ஆண் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றால் அவன் திருமணத்தை கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத சூழ்நிலை தான் இன்று இங்கே நிலவுகிறது. திருமணத்திற்காக ஒரு காலத்தில் ஒரு பெண் எதையெல்லாம் இழந்தாளோ இன்று அதை விட ஒரு ஆண் பல பேரிழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு மேலும் பல சமரசங்கள் செய்துகொள்ள வேண்டுயுள்ளது. தனது பெற்றோர்களுக்காகவும், உடன்பிறந்தவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும், பல ஆண்கள் இன்று ஒரு அடிமையைப் போலத்தான் வாழ்கிறார்கள். ஒரு சில ஆண்களோ சிறிதும் வெட்கம் இல்லாமல் தாங்கள் ஒரு அடிமை தான் என்று சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில், சினிமாவில் மற்றும் பல தளங்களிலும் அறிவிக்கின்றனர். அது ஒரு வித பேஷன்(Fashion) ஆகவும், முற்போக்கு சிந்தனையாகவும், நடுநிலைமை என்றும் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆணும் சரி, பெண்ணும் சரி, திருமண உறவு என்று வரும் பொழுது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பது என்பதே நிலையானது. முன்பு இருந்ததை விட இன்று ஆண்கள் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலையே நிலவி வருகிறது. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ஆனால் விட்டுக்கொடுப்பவர்களை தனது மற்றும் தனது குடும்பத்தினருக்காக மேலும் மேலும் சுரண்டப்படுவது நிச்சயம் அறத்திற்கு புறம்பானது. ஒரு கட்டத்தில் அது விட்டுக்கொடுப்பவரை விளிம்பு நிலைக்கு தள்ளும். இந்த நிலையில் எனது நண்பர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்ய இயலாத நிலையில் ஆற்றாமை மற்றும் குற்ற உணர்வுக்கு ஆளானேன்.
கடந்த சில நாட்களாக அதுல் சுபாஷ்(Atul Subhash) என்ற தம்பியைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். எவ்வளவு துயரத்திற்கு உள்ளானால் அவன் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பான். ஒரு தனி மனிதனை, ஒரு சமுதாயமாக நாம் கைவிட்டுவிட்டோம். சட்டங்கள் துஷ்ப்ரயோகம் செய்யப்படுவதை தவிர்க்க நீதிமன்றங்கள் ஆவன செய்ய வேண்டும். அதுலைப் பார்க்கும் பொழுது, ஆம், ஆண் பாவம் என்றே தோன்றுகிறது.
Safeer
December 13, 2024 at 11:37 AMWell written Bro
SR Narayan
December 14, 2024 at 4:14 AMThank you very much sir.
Rajkumar InIkao
December 13, 2024 at 11:52 AMSuper
SR Narayan
December 14, 2024 at 4:14 AMThanks a lot anna.
Raj
December 13, 2024 at 3:14 PMஅருமையான பதிவு!
SR Narayan
December 13, 2024 at 3:30 PMநன்றி சார்!
Guru Subbaraman
December 14, 2024 at 4:58 AMYezhuthu murai nandra irukirathu, nanbare. Paaratukal.
Yellor vazvilum nadakum unmai, yaar eppadi nerkolgirar enbathu vivathathirku uryiuathu…ithu nilaimaatru kaalam thavirka iyalathu
SR Narayan
December 14, 2024 at 9:07 AMதங்கள் கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு நன்றி சார்.