ஏழாம் நூற்றாண்டில் அன்றைய பாரத தேசத்தில் உருவான சதுரங்க விளையாட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவி பின்பு ஐரோப்பாவைச் சென்றடைந்தது. பல மாற்றங்களுக்கு உள்ளாகி, மெருகேற்றப்பட்டு இன்றைய தினம் நாம் பார்க்கும் செஸ்(Chess) விளையாட்டு உருவாகியது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளாக சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு(Fédération Internationale des Échecs) என்ற ஒரு அமைப்பு தோன்றி, இந்த விளையாட்டை சீர்படுத்தி, சட்டதிட்டங்களை உருவாக்கி, சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடத்துவது 1924ஆம் ஆண்டில் துவங்கியது. இந்த வருடம் நூறு ஆண்டுகளை நிறைவு செய்தது FIDE நடத்தும் இந்த சர்வதேச செஸ் போட்டிகள்.
நான் இரண்டு சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளேன். எந்த ஒரு அமைப்பிலும் உறுப்பினராக இருப்பதற்கு நாம் சந்தா செலுத்த வேண்டும். இது தவிர சில தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் இயக்கங்களிடம் இருந்து நன்கொடை பெறுவது வழக்கம். அப்படிப் பெறப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கும், நன்கொடையாளருக்கு அங்கீகாரமும் வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் சினெர்ஜி(Synergy) என்று ஒரு சொல் உண்டு. ஒரு குழுவில் அதிக நபர்கள் சேரும் பொழுது மிக அதிக ஆற்றல் கொண்டதாக அது மாறும் என்பது தான் சினெர்ஜியின் தத்துவம். உதாரணமாக ஐந்து நபர்கள் தனித்தனியாக சிரமப்பட்டு செய்யும் வேலையை மூன்று நபர்கள் சேர்ந்தால் சுலபமாக முடித்துவிடுவர். அதுவே சினெர்ஜி.
குறிப்பிட்ட ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்படும் இந்த சர்வதேச அமைப்புகள் கவனம் செலுத்தும் இரண்டு முக்கியமான விஷயங்கள், உறுப்பினர் பெருக்கம் மற்றும் நன்கொடைப் பெருக்கம். இவை இரண்டும் சரியாக நடந்தால் அந்த அமைப்பின் பலம் நாளடைவில் பெருகிக்கொண்டே வரும். நூறு வருடங்களாக நிலைத்து நிற்கும் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு, 203 நாடுகளில் தங்கள் கிளைகளைத் துவக்கி, உறுப்பினர்களைப் பெருக்கி, அதிக அளவில் நன்கொடைகளைப் பெற்று ஒரு மிகப்பெரிய விருட்சமாக பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
நீங்கள் FIDEயில் அடிப்படை உறுப்பினராக இருக்க ஆண்டு ஒன்றிற்கு €60, இன்றைய நிலவரப்படி ₹5400 செலுத்த வேண்டும். அப்படி சந்தா செலுத்தி உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே இவர்கள் நடத்தும் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். ஒரு மூத்த பயிற்சியாளராக இந்த இயக்கத்தில் நீங்கள் பதிவு செய்ய நான்கு வருடங்களுக்கு €180 செலுத்த வேண்டும். இது போன்று பல விஷயங்களுக்கு பல கட்டணங்கள் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வளவு கட்டணம் செலுத்தி இதில் மக்கள் உறுப்பினராக இருக்கிறார்களா என்றால், நிச்சயமாக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் சில லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் சேருவதற்கு முக்கிய காரணம், அவர்கள் செலுத்தும் சந்தாவை விட அவர்களுக்கு அதிக பலன் கிடைக்கிறது என்பது தான். பலன் என்பது இங்கே வருமானம் ஈட்டுவது அல்ல, புதிய விஷயங்கள் கற்றுக்கொள்ளக் கிடைக்கும் வாய்ப்புகள், பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கின்ற வாய்ப்புகள், முறையான பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறுதல், உள்ளூர் முதல் உலகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல், போட்டிகளில் பங்கேற்பது போன்ற பல பலன்கள் கிடைக்கின்றன. அப்படி பலன் ஏதும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் இந்த அமைப்பை விட்டு விலகிவிடுவார்கள்.
FIDE அமைப்பின் நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட் €1.75 கோடிகள், தோராயமாக ₹157.5 கோடிகள். நம் நாட்டில் பல நூற்றாண்டுகள் முன்பு உருவாகிய ஒரு விளையாட்டு இன்று சர்வதேச அளவில் பிரபலமடைந்து, அதற்கு ஒரு பன்னாட்டு அமைப்பு உருவாகி, அந்த அமைப்பு நூறு ஆண்டுகள் வளர்ந்தோங்கி, சர்வதேச அளவில் ஒரு போட்டியை ஒருங்கிணைத்து, அந்த அமைப்பின் துணைத் தலைவராக ஒரு இந்தியன்(விஸ்வநாதன் ஆனந்த்) இருப்பதும், அந்த சர்வதேச போட்டியில் முதலிடம் பெற்ற, அதுவும் அந்த அமைப்பின் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில், ஆம் வெறும் 18 வயதில் இந்த அபார சாதனையைப் புரிந்த ஒரு இந்தியன்(குகேஷ் தொம்மராஜூ) என்பதில் நாம் பெருமைகொள்ள வேண்டுமா? அல்லது அவர் தமிழரா? தெலுங்கரா? திராவிடரா? வந்தேறியா? என்று விவாதம் செய்யவேண்டுமா?