சிறுகதை, தமிழ்

கிணற்றுத்தவளை

அந்த கிணற்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முப்பத்தியோரு வயதான குழந்தை, வெயில். வாகன வெளிச்சத்தை கண்கொட்டாமல் பார்க்கும் ஒரு முயல்குட்டியைப் போல தொடர்ந்து சில நொடிகள் தன்னிலை மறந்து போனான். நினைவு வந்த பின் தன் சைக்கிளில் டக்கடித்து மேலேறி அமர்ந்தான். சில அடிகள் முன்னே சென்ற பின்பு கிணற்றை திரும்பிப்பார்த்தான். இங்கே வந்திருக்கக்கூடாது என்று அவனுக்கு தோன்றியது. மீண்டும் இங்கே வரப்போவதில்லை என்று சபதம் பூண்டான்.

விருதுநகர் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் இருக்கும் அந்த கிணறு. விருதுநகரில் இருந்து மதுரை செல்லும் அனைத்து ரயில்களில் இருந்தும் இதை பார்க்க முடியும். தண்டவாளத்திற்கு மேற்கே வரும் அந்த கிணற்றை கண நேரம் ஜன்னல் வழியே பார்க்கலாம். எனது தாத்தா ஒருவருக்கு சொந்தமானது அந்த கிணறு. சிறு வயது முதல், அந்த கிணற்றில் நான் செலவிட்ட நேரம் ஏராளம். எங்கள் வீடும் அந்தக் கிணற்றின் அருகிலேயே இருந்தது. நான் அந்த கிணற்றை ஒரு நண்பனைப் போலவே பாவித்தேன். தனியாக அதனிடம் பல முறை பேசியிருக்கிறேன், பாடியிருக்கிறேன்.

அதை கிணறு என்று சொல்வதை விட கல்-கிடங்கு என்று கூட சொல்லலாம். இன்றைய தினம் நகரத்தில் உள்ள பல நீச்சல் குளங்களை விட மிகப் பெரியது. ஏறக்குறைய சதுர வடிவில் இருக்கும். ஒரு பக்கம் கல் படிகளும், மூன்று பக்கம் பாறைகளையும் கொண்டது. ஒரு பக்க பாறைக்கு மேல் ஒரு சிறிய அறையில் மோட்டாரும், அதை விட உயரத்தில் ஒரு கழிப்பறையும் இருக்கும். உயரத்தில் இருந்து குதிப்பவர்களுக்காகவே கிணற்று வரப்பிலிருந்து ஒரு பெரிய செவ்வகக்கல் உட்பக்கமாக எட்டிப்பார்க்கும். அதையும் விட உயரத்தை விரும்புபவர்கள் மோட்டார் அறை மீதிருந்தோ, கழிப்பறை மீதிருந்தோ கிணற்றில் குதிப்பார்கள். கழிப்பறையின் கூரையிலிருந்து கிணற்றுத் தண்ணீர் ஏறக்குறைய ஐம்பது அடி உயரமாவது இருக்கும். அங்கே இருந்து குதிக்கும் போது கிடைக்கும் உற்சாகமே தனி.

சில வருடங்களுக்கு முன்பு இந்த கிணற்றை சுற்றி ஒரு கொய்யாத் தோப்பு இருந்தது. அதற்காக தோண்டப்பட்டது தான் இந்த கிணறு. நான் நீச்சல் கற்றுக்கொண்டது எனக்கு நினைவில்லை. ஏனென்றால் இரண்டு வயதாகும் முன்பே நான் நீச்சல் கற்றுவிட்டேன். பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு தான் கிணற்றுக்கு சென்ற ஞாபகம் எனக்கு இருக்கிறது. கிணற்றில் குளித்துவிட்டு திரும்பி வரும் பொழுது, என் அய்யா எனக்கு வேப்பங்கொழுந்து இலைகளை பறித்துக்கொடுப்பார். அதை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்பார். விடுமுறை நாட்களில் மட்டுமே கிணற்றுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும். சனிக்கிழமைக்காக வாரவாரம் காத்திருப்பேன். சனிக்கிழமை மட்டும் காலை அனைவருக்கும் முன்னேயெழுந்து கிணற்றுக்குளியலுக்கு தயாராகிவிடுவேன். கண்கள் சிவக்க குளித்துவிட்டு பஞ்சுப்பேட்டை ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டு, ஏலக்காய் தீர்த்தம், துளசி வாங்கிச் சாப்பிட்டு, கிரீடத்தில் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, நெற்றியில் பெரிய குங்கும நாமமிட்டுக்கொள்வேன்.

“டேய்! அடேய் வெயிலுமுத்து! எப்பப்பாரு ஏதாவது கனாக்கண்டுகிட்டு, நான் பேசுறது கேக்குதாடா?” என்று கத்தினார் என் அய்யா. சைக்கிளை ஓட்டிக்கொண்டு எங்கள் வீடு வரை வந்துவிட்டேன். வீட்டுக்கு உள்ளே நுழையும் போது அய்யா கூப்பிடுவது போல் இருந்தது.

“அ.. அ.. அ.. அய்யா.. கேக்குதுய்யா, சொல்லுங்கய்யா.”

“பஜார்ல, மாரியப்ப மாமா கடைக்கு போ. பத்தாயிரம் ரூபா குடுப்பார். வாங்கிட்டு நேர வீட்டுக்கு திரும்பி வந்து அம்மாட்ட தரணும். புரியுதா?”

“சரிய்யா.”

“எங்க போவ?”

“மாரியப்ப மாமா கடைக்கு.”

“எவ்வளவு ரூபா குடுப்பார்?”

“பத்தாயிரம்.”

“அத யார்ட்ட குடுக்கணும்?”

“அம்மாட்ட.”

“போ, சீக்கிரம் போய் வாங்கிட்டு வா.”

நான் மீண்டும் சைக்கிளை எடுத்து வாசலைத் தாண்டும் முன் என் அய்யா “இவனையெல்லாம் வெச்சு நாம இன்னும் என்ன பாடு படப்போறோமோ!” என்றார். எனக்கு கனவு காண்பது என்றால் மிகவும் பிடிக்கும். பகல் கனவு. இரவு நேரத்தில் வரும் கனவுகள் பெரும்பாலும் என்னை பயமுறுத்தும். சைக்கிளில் செல்லும் பொழுது ஒரு மோட்டார் சைக்கிள் என்னை முந்திச்சென்றது. சிறிது தூரம் அது முன்னே செல்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மோட்டார் சைக்கிள் கொடுக்கும் அதே சத்தத்தை என் வாயால் கொடுத்துக்கொண்டே சைக்கிளை வேகமாக ஏறி அழுத்தினேன்.

நிமிடத்தில் பஜாரில் உள்ள மாமா கடைக்கு வந்துவிட்டேன். மாமா தான் கிணற்றில் எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தார். எனக்கு மட்டும் இல்லை, எங்கள் ஊரில் பலருக்கும். எண்ணெய் கடையில் அமர்ந்திருந்த மாமா உளுந்து வடை சாப்பிட்டுக்கொண்டே டீ குடித்துக்கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன் அவருக்கு பின்னால் இருந்து ஒரு சிறிய செய்தித்தாள் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தார். எண்ணெய் படிந்திருந்த அந்த பொட்டலத்தை பார்த்தவுடன் எனக்கு தெரிந்துவிட்டது. மாமா எனக்கு பிடித்த வாழைக்காய் பஜ்ஜி வாங்கி அதில் மடித்து வைத்திருக்கிறார். “சாப்புட்றா!” என்றார் மாமா. அய்யா பணம் வாங்கிவரச் சொன்னார் என்றேன். அவர் “மொதல்ல சாப்பிடு” என்றார். முதல் பஜ்ஜியை எடுத்து முதல் வாய் சாப்பிடும் பொழுது எனது ஆச்சி ஒருவர் மாமாவின் கடைக்கு வந்தார். ஆச்சி எனக்கு தூரத்து சொந்தம் தான். அவருக்கு என்னை சுத்தமாக பிடிக்காது. ஆனால் எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் செய்யும் அயிரை மீன் குழம்பு அருமையாக இருக்கும். ஒரு முறை அவர் என் மச்சானுக்கு செய்து கொடுத்ததை நான் சாப்பிட்டிருக்கிறேன்.

“இவன் எதுக்கு இங்க இருக்கான்?” என்று நான் இருக்கும் திசையை நோக்கி கையைக் காட்டி என் மாமாவிடம் கேட்டார் ஆச்சி. “உங்களுக்கு என்ன வேணும்? அதச் சொல்லுங்க” என்றார் மாமா. “ஒரு லிட்டர் கடலெண்ண கொடு. காலைல பூரி கொத்துக்கறி. காசு நாளைக்கு குடுக்கறேன்.” என்று சொன்ன ஆச்சி என்னை பார்த்தவுடன் வழக்கம் போல் பேச ஆரம்பித்துவிட்டார். என் அய்யா ஆச்சியின் மகன், சரவண மாமாவை பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்றும் அதனால் தான் நான் இப்படி இருக்கிறேன் என்றார். “பெரிம்மா, எதுக்கு பழைய கதைய பேசுறிங்க? விட்டு தள்ளுங்க…” என்று மாமா முடிப்பதற்குள், ஆச்சி தொடர்ந்தார் “உனக்கு தெரியாது மாரியப்பா, இன்னைக்கு வரைக்கும் எங்க குடும்பம் பள்ளத்துல இருக்குறதுக்கு இவன் அப்பன் தான் காரணம். என் சாபம் தான் இவன் இப்படி கொறமாசத்துல பொறந்தான்…” “போதும் பெரிம்மா, நீங்க கெளம்புங்க.” என்று மாமா இடைமறித்து குரலை உயர்த்தவும், தூக்குவாளியில் வாங்கிய எண்ணெய்யை சட்டென்று மூடிவிட்டு அதற்கு மேல் ஏதும் பேசாமல் சென்றுவிட்டார் ஆச்சி.

முதல் பஜ்ஜியை தான் இந்நேரம் சாப்பிட்டி முடித்திருந்தேன். பஜ்ஜி சூடாக இல்லை, ஆனால் நல்ல சுவையாக இருந்தது. நான் எப்பொழுதும் சிறிது மெதுவாக, நன்கு சுவைத்து சாப்பிடுவேன். பொறுமையாக இரண்டாவது பஜ்ஜியை சாப்பிட்டு விட்டு, அதை மடித்திருந்த தாளில் கையில் இருக்கும் எண்ணெய்யை துடைத்துவிட்டு, தாளை கசக்கி மாமாவின் கடையில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டேன். ஒரு நூறு ரூபாய் கற்றை மாமா என் கையில் கொடுத்தார். சரியாக பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது என்று என்னிடம் சொல்லி, பாண்ட் பாக்கெட்டில் பத்திரமாக வைக்கும்படி சொன்னார் மாமா. வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றார் மாமா. வீட்டிற்கு கிளம்புவதற்காக சைக்கிளில் ஏறி அமர்ந்தேன்.

“என்ன அண்ணாச்சி, அந்த கிணத்த நாளைக்கு முனிசிபாலிடிக்கு குடுக்க போறாங்களாம்?” என்று கடைக்கு வந்த ஒரு அண்ணாச்சி என் மாமாவிடம் கேட்டார். மாமா அந்த அண்ணாச்சிக்கு எதுவும் பேச வேண்டாம் என்று கண்களால் ஜாடை காட்டிவிட்டு, நான் இருக்கும் பக்கம் பார்த்து, “நீ இன்னும் கெளம்பலையா?” என்றார். சைக்கிளில் டக்கடித்து மேலேறி விரைந்து வீட்டை நோக்கி ஓட்டினேன்.

“என்ன அண்ணாச்சி, அந்த கிணத்த நாளைக்கு முனிசிபாலிட்டிக்கு குடுக்க போறாங்களாம்?” இது ஒன்று மட்டுமே என் மண்டைக்குள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. எந்தக் கிணற்றைப் பற்றி அந்த அண்ணாச்சி சொல்லியிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வீட்டின் அருகில் சென்றபொழுது தான் புரிந்தது அது எந்தக் கிணறு என்று. புரிந்த மறுகணம் என்ன செய்வதென்றே புரியவில்லை. என் உலகமே இடிந்து விழுந்தது போலிருந்தது. முனிசிபாலிட்டி என்றால் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. முனிசிபாலிட்டிக்கு கொடுத்துவிட்டால், கிணற்றை அத்துடன் மறந்துவிட வேண்டியதுதான். சைக்கிளின் இரண்டு பிரேக்குகளையும் அந்தக் கணமே அழுத்திப் பிடித்தேன். கிணறு இருக்கும் திசையை நோக்கித் திரும்பினேன். சைக்கிள் தானாக கிணற்றை நோக்கிச் சென்றது.

கிணற்றில் தண்ணீர் அருகில் இருக்கும் முதல் படியில் அமர்ந்தேன். இரண்டு கால்களையும் தண்ணீருக்குள் இருக்கும் முதல் படியில் வைத்தேன். ஏராளமான சிறு மீன்கள் வந்து என் கால்களை முத்தமிட்டன. அது ஒரு சுகமான உணர்வு. கிணற்றின் மறுமுனையில் ஒரு தண்ணீர் பாம்பு பாறையின் மீதிருந்தது. நான் அவனுக்கு நாகா என்று பெயர் வைத்திருந்தேன். என் கால்களை தண்ணீரின் மேலும் கீழுமாக சிறிது வேகமாக ஆட்டினேன். இதுவரை அமைதியாக இருந்த கிணற்றில் தண்ணீரின் ஓசை எதிரொலித்தது. தண்ணீர் அலை அலையாக பாம்பை நோக்கிச் சென்றது. பாம்பின் அருகில் முதல் அலை வந்தவுடன் அது தண்ணீருக்குள் குதித்து மறைந்தது. நானும் நாகாவும் அடிக்கடி விளையாடும் விளையாட்டு இது. திடீரென்று பின்னால் இருந்து யாரோ என் பிடரியில் ஓங்கி அடித்தார். சற்றே நிலைகுலைந்து தண்ணீருக்குள் விழப்போனேன். சுதாரித்து திரும்பிப் பார்த்தால், என் அய்யா அங்கே மிகுந்த கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அங்கே வசைபாட ஆரம்பித்தவர், என்னை அடித்துக்கொண்டே வீடு வரை இழுத்துச் சென்றுவிட்டார். நான் அய்யாவிடம் பல முறை அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் இன்று போல் என்றும் வாங்கியது கிடையாது. நிதானம் இல்லாமல் அவர் என்னை தொடர்ந்து அடிக்கும் பொழுது ஓரிரு முறை குறி தவறியது. அப்பொழுது எனக்கு ஏனோ சிரிப்பு வந்தது. அம்மா வந்து அய்யாவிடமிருந்து என்னை எப்பொழுதும் போல் காப்பாற்றினார். அதில் அவருக்கும் அய்யாவிடமிருந்து ஓரிரு அடி கிடைத்தது. அய்யாவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத்துவங்கியது. வந்து என் பாண்ட் பாக்கெட்டில் இருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டார். “வெளிய போடா! இந்த வீட்ட விட்டு வெளிய போடா! என் கண் முன்னால நிக்காத…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கே போகவேண்டும் என்று யோசிக்கக் கூட இல்லை. நேரே கிணற்றை நோக்கி ஓடினேன். மிக வேகமாக ஓடி கிணற்றின் விளிம்பில் இருந்து அப்படியே ஒரு லாங் ஜம்ப் செய்து சில வினாடிகள் ஒரு பறவை போல் காற்றில் பறந்து நடுக்கிணற்றில் பொத்தென்று விழுந்தேன். அய்யா அடித்த இடங்கள் எல்லாம் தண்ணீர் பட்டவுடன் எரிந்தன. சிறிது நேரத்தில் எரிந்த இடங்களில் எல்லாம் இதமான குளிர் மட்டுமே இருந்தது. கிணற்றின் மறுமுனைக்கு நீச்சல் அடித்து, சில நிமிடங்கள் முன்பு நாகா அமர்ந்திருந்த அதே பாறையில் நானும் அமர்ந்தேன்.

நான் சிறுவனாக இருந்தபொழுது என் வயதில் இருந்த பலரும் இந்த கிணற்றில் நீச்சல் அடித்து விளையாடுவோம். அப்பொழுது எல்லாம் யாரும் என்னை வித்தியாசமாகப் பார்த்ததில்லை. சொல்லப்போனால், நான் நன்றாக நீச்சல் அடிக்கிறேன் என்று பாராட்டி தான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் வளர்ந்த பிறகு நான் அவர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பதாக உணர்கிறேன். அவர்கள் பேசும் பல வார்த்தைகள் எனக்குப் புரிவதில்லை. அக்கா ஒருவர் விவாகரத்து ஆகிவிட்டது என்றார். தம்பி ஒருவன் வேலை கிடைக்கவில்லை என்றான். வேலை இருக்கும் பலரோ வருமானம் போதவில்லை, அரசு வேலை வேண்டும், பதவி உயர்வு வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றனர். வெளிநாட்டில் இருக்கும் என் நண்பன் டிப்ரெஷன்னில் இருப்பதாகச் சொல்கிறான். இது வேண்டும். அது வேண்டும். பொன் வேண்டும். பொருள் வேண்டும். நிலம் வேண்டும். புகழ் வேண்டும். எது எவ்வளவு இருந்தாலும் போதாது. எனக்கோ எதிலும் மகிழ்ச்சி. ஓடும் ரயிலுக்கு டாட்டா காட்டுவது. மரத்தில் இருந்து பழங்களை பறித்துச் சாப்பிடுவது. வேப்பங்கொழுந்து சாப்பிடுவது. ரெங்கநாதர் கோவிலுக்குச் செல்வது. ஏலக்காய் தீர்த்தம் வாங்கிக் குடிப்பது. துளசி சாப்பிடுவது. கிரீடத்தில் ஆசீர்வாதம் வாங்குவது. குங்குமத்தால் நாமம் இட்டுக்கொள்வது. சைக்கிள் ஓட்டுவது. வாயிலேயே மோட்டார் சைக்கிள் சத்தம் கொடுப்பது. பஜ்ஜி சாப்பிடுவது. மெதுவாக, சுவைத்து சாப்பிடுவது. அய்யாவின் அடியில் இருந்து தப்பிப்பது. மகிழ்ச்சி. அந்த கிணற்றின் ஒவ்வொரு அங்குலமும், அங்கு நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எனக்கு மகிழ்ச்சி தான். நாகாவுடன் விளையாடுவது உட்பட. என் நண்பர்களிடம் இருந்து வேறுப்பட்டிருப்பது நன்றே. பல நேரங்களில் ஒரு கிணற்றுத்தவளையாக இருப்பதே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது.

– எழுத்தாளர் சீயான்